×

திருவாரூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை விற்று பயன்பெறலாம்

திருவாரூர், ஜூன் 7: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்களது பருத்தி பஞ்சினை விற்று பயனடையுமாறு செயலாளர் சரசு தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இருமடங்கு அளவில் அதாவது 40 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுட்டுள்ளது. இந்நிலையில் இந்த பயிர்கள் அனைத்தும் தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அறுவடை செய்யப்படும் பருத்தி பஞ்சுகள் அனைத்தும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக வியாபாரிகளை கொண்டு ஏல முறையில் கொள்முதல் செய்யப்படும் நிலையில் நடப்பாண்டில் இதற்கான கொள்முதல் ஏலம் என்பது கடந்த 1ம் தேதி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துவங்கிய நிலையில் இதில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ 12 ஆயிரத்து 269ம், குறைந்த பட்சமாக ரூ.10 ஆயிரத்து 500ம் விலை கிடைத்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

கடந்தாண்டு இறுதி வரையில் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் வரை மட்டுமே விலை கிடைத்த நிலையில் இதுவரை இல்லாத வகையில் இந்த விலை கிடைத்திருப்பதற்கு காரணம் நூல் விலை உயர்வு மற்றும் இறக்குமதி பருத்திக்கான செஸ் வரி உயர்வு போன்றவைதான் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஏலத்தில் அதிக விலை கிடைத்துள்ளதால் பருத்தி அறுவடையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பருத்தி ஏலம் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் திருவாரூர் மற்றும் பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், புதன்கிழமை குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், வெள்ளிக்கிழமை வலங்கைமான் மற்றும் மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் நடைபெறுவதாகவும், இதில் அதிகபட்ச விலை கிடைப்பதற்கு விவசாயிகள் தங்களது பருத்தியினை நிழலில் நன்கு உலர வைத்து அதிலுள்ள தூசுகளை நீக்கி விற்பனைக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 9047155282, மன்னார்குடிக்கு 9585519491, குடவாசலுக்கு 8946028223, வலங்கைமான்- 9787961868, பூந்தோட்டம்- 8072033110 ஆகிய எண்களில் விற்பனை கூட பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என செயலாளர் சரசு தெரிவித்துள்ளார்.

Tags : Regulated Market ,Thiruvarur District ,
× RELATED முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா