×

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்

நாகை,ஜூன்7: தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாகை தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் பத்மநாதன், உதவிபெறும் பள்ளி சங்க மாநில செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்ய ஆணை வழங்கிட வேண்டும். கோடை விடுமுறை இல்லாத காரணத்தால் ஈட்டிய விடுப்பு 30 நாட்கள் வழங்க வேண்டும். வேதாரண்யம் தனி கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். 2009ம் ஆண்டு முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பை சரிசெய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2.5 சதவீதம் மருத்துவ கல்லூரியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்வி மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags : Tamil Nadu Post Graduate Teachers' Association ,
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு