உலக சுற்றுச்சூழல் தினம் பூங்கா, ரயில்வே ஸ்டேஷனில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு

சேலம், ஜூன் 6: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சேலம் ரயில்வே ஸ்டேஷனில் பொதுமக்களிடம் இயற்கை பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்ட வனத்துறை சார்பில், இயற்கை பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் நடந்த விழாவில், சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி கலந்துகொண்டு, சுற்றுச்சூழல் மேம்பாட்ைட வலியுறுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டார்.

தொடர்ந்து, பூங்காவிற்கு புள்ளிமான், கடமான், முதலை, வண்ணப்பறவைகள் போன்றவற்றை பார்க்க வந்திருந்த சுற்றுலா பயணிகளிடம், மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வனப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகள், இதர பொருட்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டிற்கு கொண்டு வந்த மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் படி, அனைவரும் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், உதவி வனப்பாதுகாவலர் கண்ணன், வனச்சரகர் சுப்பிரமணியன் மற்றும் வன ஊழியர்கள், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதேபோல், உலக சுற்றுச்சூழல் தினவிழா, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் கொண்டாடப்பட்டது. உதவி வணிக மேலாளர் மாயாபீதாம்பரம் தலைமையில் ரயில்வே அதிகாரிகள், பயணிகள் மத்தியில் இயற்கை பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக், போதை பழக்க ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ரயில்வே ஸ்டேஷனில் இருந்த பயணிகள் முன்னிலையில் போதை ஒழிப்பு நாடகம் நடத்தினர். தொடர்ந்து பயணிகளிடம் துண்டுபிரசுரங்களை வழங்கி இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு இடையே ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில், நிலைய மேலாளர் செல்வராஜ், நிலைய மேலாளர் (வணிகம்) அய்யாவு, வணிக ஆய்வாளர் விக்ரம், ஆர்பிஎப் எஸ்ஐ மாதப்பன், சாரணர் இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.

Related Stories: