புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து

சேந்தமங்கலம், ஜூன் 6: சேலத்திலிருந்து இரும்பு கம்பி ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று, சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை, சென்று கொண்டிருந்தது. புதுச்சத்திரம் அடுத்துள்ள ரெட்டி புதூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, பின் பக்கமாக வந்த கன்டெய்னர் லாரி, முன்னால் சென்ற மினி லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், மினி லாரி சென்டர் மீடியனை உடைத்துக்கொண்டு மறுபக்கத்தில் நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த ஓமலூரைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சேலத்திலிருந்து வெங்காயம் லோடு ஏற்றிய லாரி, புதுச்சத்திரம் அடுத்த தாத்தையங்கார்பட்டி அருகே வந்த போது, அந்த வழியாக வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து திடீரென வெங்காய லாரி மீது மோதியது. இதில், வெங்காய லாரி தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: