குமரி கடலில் நின்ற படகில் காயத்துடன் இருந்த வெளிநாட்டு பயணி சிகிச்சைக்கு பின் அனுப்பி வைப்பு

நித்திரவிளை, ஜூன் 6: குமரி மாவட்ட கடல் பகுதியில் நின்ற வெளிநாட்டு படகில், காயத்துடன் இருந்தவர் சிகிச்சைக்கு பின் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குமரி மாவட்டம் இரயுமன்துறை கடல் பகுதியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் வெளிநாட்டு படகு ஒன்று நேற்று முன் தினம் மாலை 3 மணியளவில் வந்து நின்றது. நீண்ட நேரமாக அந்த பகுதியில் நின்றதால் சந்தேகம் அடைந்த மீனவர்கள் நித்திரவிளை போலீசாருக்கும், குளச்சல் மரைன் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.  இதையடுத்து குளச்சல் மரைன் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் படகில்  சென்று விசாரணை நடத்தினர். அந்த படகில் ஒரே ஒரு நபர் தான் இருந்தார். உணவு பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தன.

படகில் இருந்தவரிடம் விசாரித்தபோது, நெதர்லாந்து ஜெரோம் என்பவர், தனி நபர் கடல் சுற்றுலா அனுமதியுடன் படகில் சுற்றுலா வருவது தெரிய வந்தது. அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தனர். ரோப் சுற்றும் போது காலில் காயம் ஏற்பட்டதாகவும், இதனால் படகை நிறுத்தியதாகவும் தெரிவித்தார். அவருக்கு, மரைன் போலீசார் முதலுதவி சிகிச்சை செய்தனர். கரைக்கு வர போலீசாாரிடம் அனுமதி கேட்டார்.  ஆனால் போலீசார் மறுத்தனர். ஆனால் அவரால் தொடர்ந்து படகை செலுத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரை மட்டும் தனி படகில் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

நேற்று முன் தினம் இரவு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  பின்னர் நேற்று காலை சிகிச்சை முடிந்து மீண்டும் அவர் அழைத்து செல்லப்பட்டார். குமரி மாவட்டத்தில் இருப்பது மீன்பிடி துறைமுகங்கள் என்பதால், அவரது படகை இங்கு கரை ஒதுங்க அனுமதிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு சென்று கரை ஒதுங்குமாறு கூறி, விழிஞ்ஞத்துக்கு அனுப்பி வைத்தனர்.  நேற்று காலை அந்த படகு விழிஞ்ஞத்துக்கு புறப்பட்டு சென்றது.

Related Stories: