சிறுபான்மை மாணவர்களுக்கு கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்க பரிசீலனை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

நாகர்கோவில், ஜூன் 6: சிறுபான்மை மாணவர்களுக்கு  கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக  அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: இது பெரியார் பூமி, திராவிட மாடல் ஆட்சிக்கு தலைமையேற்கின்ற பூமி.  மற்ற மாநிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கின்ற செயல்களை இங்கு சுட்டிக்காட்டி அதனை பெரிதாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழர்கள் ஒரு போதும்  அதற்கு அனுமதி அளிக்கமாட்டார்கள். வெளிநாட்டில் உள்ள மக்களுக்கு அரணாக இருக்க மறைந்த தலைவர் கலைஞர் 2010ல் ஒரு துறை உருவாக்க அடித்தளம் தந்தார். அதனை தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டார்கள். தமிழக முதல்வர் மீண்டும் அந்த துறையை உருவாக்கி வெளிநாடு வாழ்கின்ற தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் தேவைகளை இன்று  பூர்த்தி செய்து  வருகிறார். உக்ரைனில் சிக்கி தவித்த மாணவர்களை மீட்டு வருவதில் தமிழகம் முனைப்பாக செயல்பட்டது. கடந்த ஓராண்டு காலத்திற்கு முன்பு வெளிநாட்டில் இறப்பவர்கள் சடலம் வருவதற்கு ஆண்டு கணக்கில் கூட ஆனது என்பதை பதிவேடுகள் காட்டுகின்றன. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அந்த எண்ணிக்கையை பார்த்தால் 6 மாதம், 3 மாதம் என்ற நிலையில் 10 நாட்களில் கூட மீட்டுக்கொண்டு வந்து கொடுத்துள்ளோம். இனி அந்த நிலையும் மாறிட தமிழக அரசு வெளிநாடு வாழ் நல வாரியத்தை அமைக்க உத்தரவு வழங்கியுள்ளார்கள். அந்த வாரியம் செயல்பட தொடங்கிய உடன் இந்த நிலை மாறிவிடும்.

ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு என்பது மாநில அரசின் தேவைகளை கேட்பது. அந்த வகையில் பல்வேறு கோரிக்கைகளை நாம் வைக்கிறோம்.  பல கால கட்டங்களில் தமிழகத்தின் தேவைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றாமல் இருக்கிறது என்று பட்டியல் போட்டு ஊடகங்களே சொல்கிறது. அதனை தொடர்ந்து பெற வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர்  பிரதமர் நரேந்திர மோடியை பல முறை சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்திற்கு வரும்போது கூட தமிழக தேவைகளை பட்டியலிட்டு உரிமைக்கு குரல் கொடுப்போம், உறவுக்கு கை கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தை திராவிட ஆட்சி மாடலை எடுத்துக்கூறியுள்ளார்.

ஒன்றிய அரசு குறிப்பிட்ட நிர்ணயத்தை, இலக்கை குறிப்பிட்டு  சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. தமிழக அரசு அதனை உயர்த்தி வழங்க கோரிக்கை வைத்துள்ளது. ஒன்றிய அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும், முடியவில்லை என்றால் தமிழக அரசு அதனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அது பரிசீலனையில் உள்ளது. எங்கள் மீது ஊழல் பட்டியல்  சுமத்தாதவர்களே இந்த நாட்டில் இல்லை. பொய் புகார்கள், அவதூறுகளை கடந்து  எந்தவிதமான புகாரும் நிரூபிக்கப்படவில்லை. அண்ணாமலை என்னென்ன  சொல்கிறாரோ சொல்லட்டும், சொன்ன பிற்பாடு அதனை கேட்டு அதற்கு பதில் சொல்ல  நாங்கள் தயாராக உள்ளோம். முதலில் முழுமையாக அவர் கூறட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: