பேராவூரணி அருகே சாதி சான்றிதழ் இல்லாமலும், குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளின்றியும் அவதியுறுகிறோம்

பேராவூரணி, ஜூன் 6: பேராவூரணி ஒன்றியம் துறவிக்காடு கடைவீதியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள எம்ஜிஆர் நகரில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த, ஆதிவாசி பழங்குடி இனத்தை சேர்ந்த பூம்பூம் மாட்டுக்காரர்கள், 300க்கும் அதிகமானோர் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி, அங்குள்ள கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால் கரை ஓரத்தில் குடிசைகள் அமைத்து குடியிருந்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் திருஷ்டி பொம்மைகள் விற்கும் பணியிலும், தப்பு, டிரம்ஸ் செட் அடிக்கும் பணியிலும், பெண்கள் சாலைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து விற்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள பிள்ளைகள் சாதிச் சான்றிதழ் இல்லாததால், 8ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல், பெண்கள் சிறுவயதிலேயே திருமணமாகியும், சிறுவர்கள்  கிடைக்கும் வேலைக்கும் சென்றுவிடுகின்றனர்.

இது குறித்து இப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறியது, அரசு எங்களுக்கு நிலப்பட்டா வழங்கி, இதுவரை இடத்தை அளந்து தரவில்லை. இடத்தை அளந்து, அரசு வீடு கட்டி தர வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். எங்கள் மூதாதையர்கள் பூம்பூம்மாடு தொழில் செய்து வந்த நிலையில், தற்போது கிடைக்கும் கூலி வேலைகளை நாங்கள் செய்து வருகிறோம். மேலும் திருஷ்டி பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். நாங்கள் இந்து ஆதியன் வகுப்பை சேர்ந்தவர்கள். எங்களுக்கு அரசு உரிய சாதி சான்றிதழ் வழங்கினால், எங்கள் குழந்தைகள் மேற்படிப்பு படிக்க உதவியாக இருக்கும். எங்கள் பிள்ளைகள் வாழ்க்கை சாதிச் சான்றிதழ் இல்லாததால் வீணாகி வருகிறது. 13 வயதிலேயே பெண் குழந்தைகள் திருமணமாகி சென்று விடுகின்றனர். ஆண் குழந்தைகள் கூலி வேலைக்குச் சென்று விடுகின்றனர். எங்களுக்கு அரசு சாதி சான்றிதழ் வழங்கினால், எங்கள் குழந்தைகள் படிக்கவும், எங்கள் வாழ்க்கை முன்னேற்றமடையவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.

இதேபோல் ஒட்டங்காடு, பட்டுக்கோட்டை, ஆலடிக்குமுளை ஆகிய இடங்களிலும் சாதிச் சான்றிதழ் இல்லாததால், இந்த சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் படிப்பு வீணாகி வருகிறது. துறவிக்காடு எம்ஜிஆர் நகரில் மட்டும் 10க்கும் மேற்பட்ட சிறுமிகளை சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிட்டதாக கூறுகின்றனர். சிறுவர்களும் குழந்தைப் பருவத்திலேயே வேலைக்கு செல்கின்றனர். மேலும் மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தினமும் அல்லலுற்று வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். சமூக ஆர்வலரும், பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினருமான துறவிக்காடு செல்வராஜ் கூறுகையில், ”இப்பகுதியில் பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இந்த பூம்பூம் மாட்டுகாரர்கள் வாரிசுகள் வசித்து வருகின்றனர். போதிய படிப்பறிவு இல்லாத நிலையில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் என்பது அதிகரித்து வருகிறது. எனவே இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்து, இந்த சமூக மக்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கவும், குடியிருக்க வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: