காரைக்கால் மாவட்டத்தில் ரோந்து படகு இல்லாததால் கடலோர காவல்படை தவிப்பு

காரைக்கால்,ஜூன் 6: காரைக்கால் மாவட்டத்தில் கடலோர காவல் படை போலீசாருக்கு ரோந்து படகுகள் இல்லாததால் கடல் வழி கண்காணிக்க முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர். இதனால் மீனவர்கள் படகை இரவல் வாங்கி ரோந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலோர பகுதி உள்ளது. இதில் காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு கோட்டுச்சேரி, மண்டபத்தூர் உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கடலோர பாதுகாப்பிற்காக காரைக்கால் கடலோர காவல் நிலையம் தொடங்கப்பட்டு இரண்டுஅதிநவீன ரோந்து படகுகளை புதுச்சேரி காவல் துறை வழங்கியது. படகுகளை பராமரிப்பு செய்ய உரிய தொழில் நுட்ப வல்லூநர்கள் இல்லாத காரணத்தால் பராமரிப்பின்றி இரண்டு படகுகளும் ஓர் ஆண்டுகளுக்கு மேலாக பழுதாகி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடல் வழி குற்றச்சம்பவங்களை கண்காணிக்கவும், தடுக்கவும் இயலாமல் கடலோரக்காவல் படைபோலீசார் தவித்து வருகின்றனர். அண்டை மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கடல்வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டு வரும் நிலையிலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ள நிலையில் தமிழக கடலோரப்பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் காரைக்கால் மாவட்டத்தில் கண்காணிப்பதற்கு போதிய படகும் உள்ளிட்ட உபகரணங்கள் இல்லாததால் மீனவ கிராமங்களில் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. மேலும் மீனவர்கள் படகை இரவல் வாங்கி 15 நாட்களுக்கு ஒரு முறையே ரோந்து செல்லும் அவலம் நிலையும் உள்ளது.

Related Stories: