×

போரூர் அரசு மருத்துவமனையில் இளம்பெண் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

பூந்தமல்லி: போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வினோதினி (30). இவர்களுக்கு சோனியா (5), மோனிஷ் (3) என்ற 2 குழந்தைகள். இந்நிலையில், வினோதினி கருத்தடை ஆபரேஷன் செய்வதற்காக போரூரில் உள்ள சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டு 3 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இதனிடையே, வினோதினிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல்  சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் பிற்பகல் அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், போரூர் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவலறிந்து போரூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். இதுகுறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கடந்த 2ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், வினோதினி போரூர் நகர்ப்புற நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம்’ என்றார்.

Tags : Porur Government Hospital ,Minister ,Ma Subramaniam ,
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...