×

127வது பிறந்தநாள் காயிதே மில்லத் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

சென்னை: 127வது பிறந்தநாளையொட்டி காயிதே மில்லத் நினைவிடத்தில் தலைவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர். காயிதே மில்லத் 127வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தியும், மலர்களை தூவியும் மரியாதை செய்தார்.

அப்போது அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், அமைப்பு செயலாளர் பொன்னையன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வளர்மதி, பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., அதிமுக இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் சார்பில் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி  மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் எம்.பி.  ஜே.எம்.ஆரூண், எம்.எல்.ஏ. அசன் மவுலானா, மாவட்ட தலைவர்கள்  எம்.பி.ரஞ்சன்குமார், சிவராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார். அப்போது மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழக குமார், சைதை சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் காயிதே மில்லத் நினைவிடத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்பி மரியாதை செலுத்தினார். அப்போது துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமமுக சார்பில் மண்டல பொறுப்பாளர் கரிகாலன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, அமைப்பு செயலாளர்கள் நேதாஜி கணேசன், தஷ்ணாமூர்த்தி மலர்தூவி மரியாதை செலுத்தினர். தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் விசாகராஜா, தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில தலைவர் முஸ்தபா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செய்தனர்.

Tags : Gaide Millat Memorial ,
× RELATED 127வது பிறந்தநாளை முன்னிட்டு காயிதே...