×

கல் குவாரி விபத்து வழக்கு கைதான 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

நெல்லை, ஜூன் 4:  நெல்லை முன்னீர்பள்ளம் அடுத்த அடைமிதிப்பான்குளம் கல் குவாரியில் கடந்த 14ம் தேதி பாறைகள் சரிந்து விழுந்ததில் இடையன்குளம் செல்வம், ஆயன்குளம் முருகன், காக்கைக்குளம் செல்வக்குமார், ஊருடையான்குடியிருப்பு ராஜேந்திரன் ஆகியோர் பாறைகளின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்தனர். விட்டிலாபுரம் முருகன், நாட்டார்குளம் விஜயன் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார், லைசென்ஸ்தாரர் சங்கரநாராயணன், மேலாளர் ஜெபஸ்டின் ஆகியோர் மீது முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுருபரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் சுப்பிரமணியன் மற்றும் காயமடைந்த முருகன் சார்பில் ஆஜரான முன்னாள் அரசு வக்கீல் ராஜ பிரபாகரன், உயிரிழந்த செல்வக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல் அலிப் மீரான் ஆகியோர் 4 பேருக்கும் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 4 பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : stone quarry ,
× RELATED மிசோரம் கல் குவாரி இடிந்து 15 பேர் பலி