செஞ்சி அருகே பாலத்தின் தடுப்பு கட்டையில் கார் மோதி ஒருவர் பலி

செஞ்சி, ஜூன் 4: செஞ்சி அருகே ஆற்று பாலத்தின் தடுப்பு கட்டையில் கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயம் அடைந்தனர்.

புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் ராவ். இவரது மகன்கள் பிரசாந்த் குமார்(37), விக்ரம் (34) மற்றும் உறவினர் கஜேந்திரன் (42) ஆகிய 3 பேரும் பெங்களூருவில் இருந்து செஞ்சி வழியாக புதுச்சேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வல்லம் அடுத்த தொண்டி ஆற்று பாலத்தின் தடுப்பு கட்டை மீது கார் திடீரென நிலைதடுமாறி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விக்ரம் இறந்துபோனார். மேலும் பிரசாந்த் குமார், கஜேந்திரன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். போலீசார் மற்றும் பொதுமக்கள் அவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமார் செஞ்சி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: