×

ரெட்டியார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி அங்கன்வாடி உதவியாளர் பலி

புதுச்சேரி, ஜூன் 4: ரெட்டியார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் அங்கன்வாடி உதவியாளர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். புதுச்சேரி, முத்திரையர்பாளையம், காந்தி திருநல்லூரை சேர்ந்தவர் ராஜவள்ளி (45). அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடியில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இவரது கணவர் உடல்நிலை பாதித்து வீட்டில் ஓய்வில் இருக்கும் நிலையில், குழந்தைகளும் பள்ளி விடுப்பில் வீட்டில் இருந்தனர். நேற்று காலை வீட்டில் சமையல் வேலைகளை முடித்துவிட்டு 10 மணியளவில் வழக்கம்போல் அங்கிருந்து அங்கன்வாடிக்கு ராஜவள்ளி தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார்.
அவர் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வந்த போது அவருக்கு பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் ராஜவள்ளி மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி அவர் கீழே விழுந்த நிலையில் பஸ்சின் முன்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜவள்ளி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

 இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்படவே வடக்கு டிராபிக் எஸ்ஐ கேசவன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து டிராபிக் நெரிசலை ஒழுங்குப்படுத்தினர். பின்னர் இறந்த ராஜவள்ளியின் உடலை மீட்டு கதிர்காமத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ராஜவள்ளியின் உறவினரிடம் புகாரை பெற்ற போலீசார், விபத்துக்கு காரணமான தனியார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 ஏற்கனவே 2 தினங்களுக்கு முன்பு ரெட்டியார்பாளையத்தில் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியதோடு எம்பியின் உறவினர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் அடுத்ததாக ரெட்டியார்பாளையத்தில் அங்கன்வாடி பெண் ஊழியர் விபத்தில் பலியாகி இருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Anganwadi ,Retiarpalayam ,
× RELATED திருவொற்றியூரில் அங்கன்வாடி மைய பணிக்கு அடிக்கல்