குப்பையில்லா குமரி ஆக்க நடவடிக்கை அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

நாகர்கோவில், ஜூன் 4: குமரியை குப்பையில்லா குமரி ஆக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோதங்க ராஜ் கூறினார்.

நாகர்கோவில்  கலெக்டர் அலுவலகத்தில்,  தூய்மையான மாநகருக்கான  மக்கள் இயக்கம் தொடக்க நிகழ்ச்சி மற்றும் தூய்மை உறுதி மொழி ஏற்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் அரவிந்த் தலைமை வகித்தார். மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.  அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

 குமரியை  குப்பையில்லா குமரி ஆக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  இதன்படி, குமரியில் தேங்கும் குப்பைகளை குறைக்க  மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே  பிளாஸ்டிக் தடை கொண்டு வந்துள்ளது. இதுதவிர பழையாற்றங் கரையில்  ஆக்ரமிப்புகள் அகற்றி, குப்பைகள் கொட்டுவதை தடுக்க மரங்கள் நடப்பட்டு  வருகின்றன.

வீடுகளில் இருந்தே குப்பைகளை குறைக்கும் வகையில்,  வீடுகளில் குப்பகைளை தரம் பிரித்து, வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட மக்கள் இயக்கமாக இதனை  தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில், நாகர்கோவில்  மாநகராட்சியில் தேங்கிய  குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கி விற்றதில் ₹6.28  லட்சம் கிடைத்துள்ளது. இதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கே பிரித்து  வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, மாநகராட்சி ஆணையர்  ஆனந்த் மோகன், கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர் நல அலுவலர்  விஜய்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: