ஊராட்சி கட்டிடத்தில் நிகழ்ச்சி நடத்த தடை

அன்னூர், ஜூன் 4: அன்னூர் ஒன்றியம் கரேகவுண்டன் பாளையம் ஊராட்சியில் உள்ளது சாலையூர் குரும்பபாளையம். இங்கு உள்ள ஆதிதிராவிடர் காலனியில் 500 பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் பொது நிகழ்ச்சி நடத்துவதற்கு கட்டிடம் இல்லை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து 2015-ல் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் 15 லட்ச ரூபாய் செலவில் கட்டிடம் கட்டும் பணி துவங்கியது. பின்னர் அது இ- சேவை மையம் கட்டிடமாக மாற்றப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அப்பகுதி மக்கள் கடந்த 7 ஆண்டுகளாக இங்கு பல்வேறு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு வட்டார மகளிர் திட்ட அதிகாரிகள், இந்த கட்டிடம் மகளிர் திட்டத்திற்கு சொந்தமானது. எனவே இங்கு சுய உதவி குழு கூட்டம், சுய உதவி குழு பயிற்சி மற்றும் இ-சேவை மையம் ஆகியவை மட்டுமே செயல்படும். சமுதாய நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று கூறி தடை விதித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் குவிந்தனர். ஊராட்சி தலைவர் தங்கராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால், மாவட்டத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் காலனி மக்களுடன் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து கோவை மாவட்ட மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் செல்லம் பேசுகையில் “இந்த கட்டிடம் மகளிர் திட்டத்துக்கு சொந்தமானது. இ-சேவை மையம் துவக்கினால் உங்கள் பகுதி மக்கள் குறைந்த கட்டணத்தில் ஜாதிச்சான்று, பிற்படுத்தப்பட்டோர் சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பெறமுடியும். அது உங்களுக்கு உதவியாக இருக்கும். அல்லது இங்கு இ-சேவை மையம் வேண்டாமென்றால் வேறு இடத்தில் இ-சேவை மையத்திற்கு ஊராட்சி சார்பில் கட்டிடம் கட்டித் தருகிறோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால், அதை அரசுக்கு அனுப்பி அந்த இடத்தில் இ-சேவை மையத்தை துவக்கிக்கொள்கிறோம்.

இந்த பழைய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க அரசிடம் அனுமதி பெற்று ஒப்படைக்கிறோம்” என்றனர். எனினும் கிராம மக்கள் உடனடியாக தொடர்ந்து அந்த கட்டிடத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். இது குறித்து அரசுக்கு தெரிவிப்பதாகக் கூறி உதவி திட்ட அலுவலர் சென்றார்.

Related Stories: