விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் அதிமுக ஆட்சியில் விதிகளை மீறி மணலை சுரண்டியதால் பாதிப்பு

விழுப்புரம்,  ஜூன் 3: கடந்த அதிமுக ஆட்சியில் தென்பெண்ணை ஆற்றில் விதிகளைமீறி  மணல்குவாரியில் சுரண்டவிட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதாகவும்,  இனி புதிய குவாரியை அரசு சட்டவிதிக்குட்பட்டு அமைக்கலாம் என பொதுமக்கள்  கருத்து தெரிவித்தனர். விழுப்புரம் அருகே  ஏனாதிமங்கலத்தில் அரசு மணல்குவாரி அமைக்கப்பட உள்ளது.  மாசுகட்டுப்பாட்டுவாரியம் சார்பில் சுற்றியுள்ள கிராம மக்களிடையே  கருத்துக் கேட்புக்கூட்டம் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் நடந்தது. ஆட்சியர்  மோகன் தலைமை தாங்கினார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் காமராஜ்  மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில்  கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு பேசியதாவது: விழுப்புரம்  மாவட்டம் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் ெதன்பெண்ணை ஆற்றைநம்பியே  உள்ளது. கடந்த 1972ம் ஆண்டுக்குப்பிறகு சமீபத்தில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதுவும், அணைக்கட்டுகள்  உடைப்பினால் போதிய தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. மணல் அள்ள, அள்ள  நிலத்தடிநீர்மட்டம் குறைந்துவிடும். இதனால், விவசாயம் பாதித்துவிடும் எனவே,  மணல்குவாரி அமைக்கக்கூடாது.

மாரங்கியூரில் குடிநீர்தட்டுப்பாடு  ஏற்பட்டதற்கு கடந்த காலத்தில் செயல்பட்ட மணல்குவாரிகள்தான் காரணம். அதேபோல்,  ஆற்றில் இறங்கி 5 கி.மீ தூரம் சென்று பாருங்கள் மணலே கிடையாது. கடந்த அதிமுக ஆட்சியில் இரண்டு முறை மணல்குவாரி அமைக்கப்பட்டு மணல்களை  சுரண்டிவிட்டனர். 1 மீட்டர் ஆழத்துக்கு எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், 30  அடி ஆழம்வரை மணலை தோண்டி எடுத்துவிட்டனர். மணல்குவாரி அமைத்தாலும்,  விதிகளை பின்பற்றமாட்டார்கள். 8 மணிநேரம் குவாரி செயல்படும் என்று  கூறப்பட்டநிலையில், இரவு வரை மணல்களை அள்ளுவார்கள். நூற்றுக்கணக்கான  லாரிகள் வந்து செல்வதன்மூலம் அருகில் உள்ள கிராமங்களில் காற்றுமாசு ஏற்பட்டு  மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

கிராமங்கள் மட்டுமல்ல, விழுப்புரம்  நகர மக்களுக்கு இங்கிருந்துதான் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. திரும்பவும்  மணல் குவாரி அமைக்கப்பட்டால் நகர மக்களின் குடிநீர் தேவையும் பாதிக்கப்படும்.  விவசாயிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய மணல்குவாரிக்கு நாங்கள்  எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஆட்சியர் எங்களின் கோரிக்கைகளை  அரசுக்கு ெதரிவித்து மணல் குவாரி அமைக்க தடைவிதிக்க வேண்டுமென தெரிவித்தனர்.  

தொடர்ந்து பேசிய ஆட்சியர் மோகன், மேலும் கருத்து தெரிவிக்க விரும்புவோர்  வரும் 7ம் தேதிவரை ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக தெரிவிக்கலாம்.  பொதுமக்களின் கருத்துக்கேட்ப மாவட்ட நிர்வாகம் செயல்படும் என்று  ெதரிவித்தார்.

Related Stories: