×

சென்னை- ராமேஸ்வரம் ரயிலை திருத்துறைப்பூண்டி-காரைக்குடி வழியாக இயக்க வேண்டும் உபயோகிப்பாளர் சங்கம் எதிர்பார்ப்பு

திருத்துறைப்பூண்டி, ஜூன் 3: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி- காரைக்குடி அகல ரயில்பாதையில் சென்னை ராமேஸ்வரம் ரயிலை இயக்க வேண்டும் என்று உபயோகிப்பார்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியுள்ளதாவது: திருவாரூர்- காரைக்குடி அகல ரயில்பாதை ரூ.1,500 கோடி செலவில் அமைக்கப்பட்டு 3 வருடங்களாகிறது. சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் திருச்சி -காரைக்குடி வழியே செல்கிறது. ராமேஸ்வரம் செல்லும் ரயிலை திருவாரூர் -காரைக்குடி மார்க்கத்தில் இயக்கினால் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் குறையும். எரிபொருளும் அலைச்சலும் பயணிகளின் பயண செலவும் மிச்சமாகும். வட இந்திய யாத்திரிகர்கள் காசி சென்று விட்டு ராமேஸ்வரம் செல்வது பலநூறு ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. தென்மண்டல ரயில்வே நிர்வாகம் திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் ரூ.1,500 கோடி செலவழித்து அகல ரயில் பாதையாக மாற்றிய பின்னரும் வேண்டும் என்றே இந்த ரயில் பாதையை புறக்கணிப்பதாக தெரிகிறது. மண்டல ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் நாகப்பட்டினம், காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படும் நிலை இருந்து வருகிறது. கம்பன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பழைய ரயில்களுக்கு முன்னுரிமை கொடுத்து இயக்காமல் புறக்கணிக்கப்படுகிறது. இந்திய ரயில்வே அமைச்சகம் உடனடியாக சென்னை- ராமேஸ்வரம் ரயில், கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்களை திருத்துறைப்பூண்டி -காரைக்குடி அகலரயில் பாதை வழியே இயக்க வேண்டும் என்று ரயில் உபயோகிப்பாளர் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chennai-Rameeswaram ,Thiruthuraipoondi-Karaikudi ,
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு