கறம்பக்குடியில் திருமண விழாவுக்கு வந்தவர் மர்ம சாவு

கறம்பக்குடி, ஜூன் 3: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்புக்கோவில் சாலையில் திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பட்டுக்கோட்டை சீனிவாசபுரம் கண்டியன் தெருவை சேர்ந்த சகோதரர்கள் ஜெயபால் (62), நாகராஜன் (60) வந்திருந்தனர். இவர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மதிய உணவு அருந்தி விட்டு தங்களது இருசக்கர வாகனத்தில் மண்டபத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டனர். அவர்கள் புறப்பட்ட சில நொடியிலேயே மண்டபத்தின் அருகே உள்ள வளைவில் திரும்பும் போது திடீரென்று கீழே நாகராஜன் விழுந்தார். இதில் காயமடைந்த அவருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. சற்று நேரத்திலேயே நாகராஜன் இறந்து விட்டார். இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அங்கு வந்த போலீசார் நாகராஜன் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: