×

நீடாமங்கலத்தில் நூலக கட்டிட சுவரில் விரிசல் வாசகர்கள் அச்சம்

நீடாமங்கலம், ஜூன் 2: நீடாமங்கலம் கிளை நூலக கட்டிடம் விரிசல் ஏற்பட்டுள்ளதால் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட ேவண்டும் என்று வாசகர்கள் மற்றும் நூலகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீடாமங்கலத்தில் 29.6.1963ம் ஆண்டு கிளை நூலகம் தொடங்கப்பட்டது. இந்த நூலகம் சத்திரம் இடத்திலும், பிறகு காவல் நிலையம் அருகிலும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டது. நூலகத்தில் 4,200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 60 பேர் புரவலராக சேர்ந்துள்ளனர். நூலகத்தில் 34,235க்கு மேற்பட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் உள்ளது. இணைய தள வசதியும் உண்டு. தற்போது கிளை நூலக கட்டிடம் நீடாமங்கலம் தாலுக்கா அலுவலகம் எதிரில், நீதிமன்றம் செல்லும் வழியில், அரசு மருத்துவமனை அருகிலும் இயங்கி வருகிறது. அப்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராஜமாணிக்கம் பரிந்துரையில் பொதுப்பணித்துறையின் நிதியில் கடந்த 1998ம் ஆண்டு இங்கு புதிய கட்டிடத்தில் தொடங்கப்பட்டது.

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் உள்ளவர்கள் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியில் உள்ளவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர். இந்த நூலக கட்டிட சுவர் பல இடங்களில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் வாசகர்கள் நூலகத்திற்கு சரியாக வருவதில்லை. நீடாமங்கலத்தில் அரசுக்கு சொந்தமான பல இடங்கள் இருந்தும் சம்மந்தப்பட்ட நூலகத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

இதுகுறித்து வாசகர்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நீடாமங்கலம் கிளை நூலகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. கடந்த கொரோனா காலத்திற்குப்பிறகு தற்போது சிறப்பாக செயல்படுகிறது. நூலகத்திற்கு படிக்கச் சென்றால் கட்டிடத்தில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகிறது. கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் எப்போது கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் வாசகர்கள் சிலர் நூலகத்திற்கு வருவதை தவிர்த்து விட்டனர். எனவே சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் நீடாமங்கலம் கிளை நூலகத்தை பார்வையிட்டு மற்றொரு இடத்தில் நவீன வசதியுடன் கூடிய புதிய நூலகத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Needamangalam ,
× RELATED கோடை நடவு பயிரில் எலிகளை கட்டுப்படுத்த பறவை தாங்கி