×

விராலிமலை அருகே விட்டமாப்பட்டி குளத்தில் மீன்பிடிதிருவிழா கோலாகலம்

விராலிமலை, ஜூன்2: விராலிமலை அருகே விட்டமாப்பட்டி குளத்தில் பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. விராலிமலை அருகே கடப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் முன்பு உள்ள விட்டமாபட்டி குளத்தில் கடந்த வருடம் பெய்த பருவமழை காரணமாக நீர்நிரம்பி இருந்தது. சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக குளத்தில் நீர் வற்றாமல் இருந்ததால் சிறிய பெரிய வகை மீன்கள் இருந்து வந்தது. இந்நிலையில் குளத்தின் நீரானது தற்போது வற்றியதால் மீன்பிடி திருவிழா நடத்துவது என ஊர் பொதுமக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை மீன்பிடி திருவிழாவானது நடத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பிடி திருவிழா நடைபெறுவதால் கடப்பட்டி, கல்குடி, பொருவாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாலையிலேயே குளத்திற்கு வந்தனர்.

இதையடுத்து கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசியதை தொடர்ந்து குளத்தின் கரையில் தயாராக நின்ற பொதுமக்கள் தாங்கள் கொண்டுவந்த வலை, தூரி, கச்சா உள்ளிட்டவைகளை கொண்டு குளத்தில் மீன்களை பிடிக்க இறங்கினர். இதில் விரால், அயிரை, கெழுத்தி, வளனகெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை கிராம மக்கள் பிடித்துச் சென்றனர். எங்கும் இல்லாத வகையில் பெரியவர்களுக்கு இணையாக சிறுவர்களும் இக்குளத்தில் இறங்கி மீன்பிடித்த சம்பவம் மீன்பிடி திருவிழாவை காண வந்தவர்களையும் மகிழ்ச்சியடைய செய்தது.

Tags : Vittamapatti pond ,Viralimalai ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா