போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

கோவை:  கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, ஸ்டோரில் வேலை செய்து வந்தார். இவர் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று வந்துள்ளதாக தெரிகிறது. இவருக்கும் அப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தகவல் அனுப்பி வந்தனர். நாளடைவில் இவர்கள் செல்போனின் எண் பெற்று பேசி வந்தனர். இந்த நிலையில் சிறுமி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். அப்போது சிறுமியை 17 வயது சிறுவன் ஆசைவார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதும், பழனி கோயிலுக்கு அழைத்து சென்று அங்கே லாட்ஜில் இரு நாட்கள் தங்கியதும், சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரியவந்தது. இந்த நிலையில் இருவரும் தங்கியிருந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டு வந்து கோவையில் வைத்து விசாரித்தனர். பின்னர் சிறார் பாலியல் பலாத்காரம் (போக்சோ சட்டம்) பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

Related Stories: