×

திருச்சி மாநகராட்சி 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் ரங்கத்தில் நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் ரூ.44 கோடியில் மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் விரிவாக்கப் பணி


திருச்சி, மே 31:  திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அன்பழகன் 2022-2023க்குகான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இதில் ஸ்ரீரங்கத்தில் நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைப்பது, ரூ.44கோடியில் மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் விரிவாக்கப்பணி மேற்கொள்ளுதல், மேலப்புதூரில் நடைபாலம் ஏற்படுத்துதல், மாநகராட்சி பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது போன்ற சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தீண்டாமை உறுதிமொழி, திருக்குறளுடன் கூட்டம் துவங்கியது. நிதிக்குழு தலைவர் முத்துச்செல்வம் 2022-23ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மேயர் அன்பழகனிடம் தாக்கல் செய்து, நிதிநிலை அறிக்கையை வாசித்தார். அதனைத் தொடர்ந்து மேயர் அன்பழகன் இந்த பட்ஜெட் தொடர்பான விவாதம் வரும் 2ம் தேதி நடக்கும் என தெரிவித்தார்.

இந்த பட்ஜெட்டில் தேசிய நகர்புற சுகாதாரத்திட்டத்தின்கீழ் ரூ.9 கோடி மதிப்பில் 18 மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 2 ஆரோக்கிய நல மையங்கள் என மொத்தம் 36 மையங்கள், இதேபோல் உறையூர், கீழரண்சாலை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைகளில் புதிதாக சுகாதார ஆய்வகம் ரூ.44 லட்சத்தில் அமைத்தல், மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் தற்போதயை போக்குவரத்திற்கேற்ப மாற்றியமைத்து, அகலப்படுத்தும் பணி ரயில்வே பங்குத்தொகை ரூ.22 கோடியுடன் இணைந்து மாநகராட்சி ரூ.44 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.16.50 கோடி மதிப்பில் 56.623கி.மீ நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணி, பழுதடைந்த 21 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ரூ.3.46 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல், மேலும் 16 இடங்களில் ரூ.34 கோடி மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் புதிதாக அமைத்தல், ரூ.53.11 கோடி மதிப்பில் புதிதாக 1,77,016 குடிநீர் இணைப்புகள் வழங்குதல், பஞ்சப்பூர் பகுதியில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.200 கோடியில் அமைக்கப்பட உள்ளது. ரூ.210 கோடி நிதியில் விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடைஅமைப்பு ஏற்படுத்துவது, தாமரைக்குளம், சாத்தனூர் செங்குளம் ஆகியவை ரூ.1.20கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது.

இதேபோல் பஞ்சப்பூர்குளம் ரூ.30 லட்சத்தில் புனரமைத்தல், திருச்சி மாநகராட்சியில் ரூ.14.55 கோடி மதிப்பில் பல்வேறுதிறன் கொண்ட 6266 எண்ணிக்கையிலான புதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளது. ரூ.10 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கட்டிட இடிபாடு கழிவுகளுக்கு தீர்வு காண ரூ.6 கோடி மதிப்பில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.1.30 கோடி மதிப்பில் நவீன சாலை சுத்தம் செய்யும் இயந்திரம் வாங்கப்பட உள்ளது. ரூ.140 கோடி மதிப்பில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் முனையம், ரூ.377.79 கோடியில் பஞ்சப்பூர் பகுதியில் சரக்கு உந்து முனையம், பல்வகை பயன்பாட்டு மையம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளி கட்டிடங்களில் தனியார் பள்ளிக்கு இணையாக தரம் உயர்த்துவதற்கு அபிவிருத்திப்பணிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள், அங்கன்வாடி மையங்கள் புனரமைக்கும் பணிகள் மற்றும் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் தேவைக்கேற்ப நவீன கழிப்பிட வசதிகள் மேற்கொள்ள ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றது.

Tags : Trichy Corporation ,Maurice Theatre Promotion ,Bus Station ,Rangam ,
× RELATED “எப்படி இருந்த நான்” இப்படி...