
குளச்சல், மே 31: கேரளா அரசின் விஷூ பம்பர் லாட்டரியில் குமரியை சேர்ந்த அரசு டாக்டர், உறவினருக்கு ரூ.10 கோடி பரிசு விழுந்துள்ளது. தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ள போதிலும் கேரளா அரசால் லாட்டரி நடத்தப்பட்டு வருகிறது. பண்டிகை காலங்களில் சிறப்பு பம்பர் பரிசுகளையும் அறிவித்து வழங்கி வருகின்றனர். கேரளாவையொட்டிய குமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு தொழில் நிமித்தமாக கேரளா செல்வோர் லாட்டரி சீட்டுகளை வாங்கி வருவது வழக்கம். குமரி - கேரள எல்லை பகுதியான களியக்காவிளையிலும் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுகிறது. இந்தநிலையில் கேரளாவில் இந்த ஆண்டு விஷூ பம்பர் லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ரூ.10 கோடி விழுந்தது. இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூ. 250. மொத்தம் 43 லட்சத்து 86 ஆயிரம் டிக்கெட் அச்சடிக்கப்பட்டிருந்தது..
மே மாதம் 22ம் தேதி நடைபெற்ற குலுக்கலில் திருவனந்தபுரத்தில் விற்பனை செய்யப்பட்ட HB 727990 என்ற எண்கொண்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசு என்று அறிவிக்கப்பட்டது. திருவனந்தபுரம் பழவங்காடி பகுதியில் உள்ள சைதன்யா லக்கி சென்டர் என்ற நிறுவனம் இந்த டிக்கெட்டை விற்பனை செய்திருந்தது. அங்கிருந்து டிக்கெட் மொத்தமாக வாங்கி வலியதுறையை சேர்ந்த ரங்கன்- ஜெசிந்தா தம்பதியினர் சில்லறை விற்பனை செய்திருந்தனர். இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக முதல் பரிசு பெற்றவர் யார் என்பதை கண்டறிய முடியாத நிலை இருந்து வந்தது. இது கேரளாவில் விவாத பொருளாகவும் இருந்தது.
இந்தநிலையில் அந்த லாட்டரி சீட்டிற்கு சொந்தகாரர்களாக குமரி மாவட்டம் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வரும் டாக்டர் எம்.பிரதீப் குமார், உறவினர் என்.ரமேஷ் என்பதும், இவர்கள் மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. உறவினரை வெளிநாடு அனுப்பி வைக்க கடந்த 15ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று வந்த நிலையில் இவர்கள் இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளார்கள். வீட்டின் அருகே நடந்த மரணம் மற்றும் திருவிழா காரணமாக பரிசுத்தொகையை பெறுவதற்கு அவர்கள் செல்ல தாமதமானது.
நேற்று டிக்கெட் உடன் இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி இயக்குநரகத்தில் சென்றுள்ளனர். நோட்டரி பப்ளிக் சான்று பெற்று வரவேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு நோட்டரி பப்ளிக் சான்று பெற்று டிக்கெட்டை லாட்டரி இயக்குநகரத்தில் ஒப்படைத்துள்ளனர். அதுவரை இவர்கள் இந்த தகவலை வெளியே விடவில்லை. லாட்டரி டிக்கெட் குலுக்கல் முடிந்த 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது விதி ஆகும்.
கேரளாவிற்கு வெளியே உள்ளவர்கள் எடுத்த லாட்டரி சீட்டில் பரிசு விழுந்திருந்தால் லாட்டரி சீட்டு மற்றும் அடையாள அட்டையுடன் நோட்டரி பப்ளிக் சான்று, பெயர், நோட்டரி ஸ்டாம்ப், நோட்டரி சீல் போன்றவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாகவோ, தபால் மூலமாக எனில் அடையாள அட்டையுடன் கேரளாவில் வருவதற்கான விளக்க கடிதம், கேரள அரசு அளித்த அடையாள அட்டையோ ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் உண்டு. பரிசுத்தொகை ரூ.10 கோடியில் வரித்தொகை கழித்து ரூ.6 கோடியே 16 லட்சம் இவர்களுக்கு கிடைக்கும்.
இது தொடர்பாக டாக்டர் பிரதீப்குமார் கூறுகையில், ‘வழக்கமாக லாட்டரி சீட்டு எடுக்கும் பழக்கம் உண்டு. சிறிய அளவில் பரிசுகள் விழுவதும் உண்டு. ஆனால் இதுபோன்று பெரிய அளவில் பரிசுத்தொகை விழுந்தது இல்லை. சிறிது கடன்கள் உள்ளன. அவற்றை அடைக்க வேண்டும். கடவுளுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். பிரதீப்குமார் மனைவி டாக்டர் லேகா வி. நம்பியார்(45). இவர் மணவாளக்குறிச்சியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். மகன் அர்ஜூன்(18) பிளஸ் டூ முடித்து விட்டு ‘நீட்’ தேர்வுக்கு வீட்டிலிருந்து தயாராகி வருகிறார். ரமேஷ், பிரதீப்குமாரின் மைத்துனர் ஆவார்.