×

வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் வாலாஜாபாத் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும் அரசு மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருபவர்கள் நாள்தோறும் இந்த வாலாஜாபாத் பேருந்து நிலையம் வந்து தான் இங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மறைமலைநகர், ஓரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இது மட்டுமின்றி கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளும் காஞ்சிபுரத்தில் இருந்து இயக்கப்படும் கிராமப்புற பேருந்துகள் வாலாஜாபாத் பேருந்து நிலையம் வந்து தான் இங்கிருந்து பல்வேறு  கிராமங்களுக்கு சென்று வருகின்றன.

இதனால் இப் பேருந்துநிலையத்தில் எப்போதுமே பேருந்திற்காக நூற்றுக்கணக்கானோர் காத்திருப்பது வழக்கம். இதில் முதியவர்கள், தாய்மார்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் என மணிக்கணக்கில் காத்திருக்கும் பொழுது இங்குள்ள பேருந்து நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக பேருந்து பயணிகள் அமர்வதற்கு இருக்கை, குடிநீர் வசதி, கழிவறை என எந்தவித அடிப்படை வசதிகளும்  இல்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து கிராமப்புற பேருந்து பயணிகள் கூறுகையில், வாலாஜாபாத் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன இந்த கிராமங்களில் உள்ளவர்கள் வாலாஜாபாத் பேருந்து நிலையம் வந்து தான் இங்கிருந்து பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு சென்று வருகின்றோம். இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. கோடைகாலத்தில் இங்கு தண்ணீர் கூட இல்லை. கடைகளில் பாட்டில்களில் உள்ள தண்ணீரை விலைக்கு வாங்கி குடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதியில் நிரந்தர குடிநீர் தொட்டிகளை அமைத்து கிராம மக்களும் பேருந்து பயணிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறுகின்றனர்.

Tags : Walajabad ,
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...