×

வைகாசி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர்: நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்

திருத்தணி: விடுமுறை தினம் மற்றும் வைகாசி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக பிரசித்திபெற்ற திருத்தலம். இந்நிலையில், வைகாசி கிருத்திகையை முன்னிட்டு நேற்று  முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் முருகனுக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கார், வேன், பேருந்துகளில் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தனர்.

தொடர்ந்து பக்தர்கள் குவிந்ததால் ரூ.150, ரூ.100, ரூ.25 மற்றும் இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் அதிகநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதேநேரம் கடுமையான வெயிலும் கொளுத்தியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் காத்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என பலரும் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் திருத்தணி - அரக்கோணம் சாலை முதல் மலைக்கோயில் வரை வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்டநேரம் மலைக்கோயிலுக்கு செல்லவும், இதேபோல் கீழே இறங்கவும் காலதாமதமானது. விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் விஜயா, கோயில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர். இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் 70 போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் பெண் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Thiruthani Murugan Temple ,Vaikasi Krithika ,Swami ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் 2ம் நாள்...