தஞ்சையில் கலெக்டர் தலைமையில் குறைதீர் கூட்டம் தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்

தஞ்சாவூர், மே28: உரித்த தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்,தினர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.

இதில் விவசாயிகள் பேசியதாவது:

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்:  கடந்த 2021- 22ம் ஆண்டில் குறுவை, சம்பா, தாளடி பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. கால தாமதத்துக்கான வட்டியுடன் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். வண்டல் மண் எடுக்க அனுமதி என்ற பெயரில் விதிமீறல்கள் இல்லாத வகையில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

தோழகிரிப்பட்டி கோவிந் தராஜ்: தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் பிற்பகுதியில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை. இதை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மே மாதத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது சாதனையாகும். அதோடு குறுவைத் தொகுப்பு திட்டத்தை கொண்டு வந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என்றார்.

அப்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இந்த ஆலை விவசாயிகள் வழங்கிய கரும்பில் சர்க்கரை கட்டுமானம் 9.22 சதவீதம் எட்டியிருக்கிறது. இந்த சாதனை படைத்த விவசாயிகளுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். உடன் விவசாயிகள் கைகளை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பொன்னவராயன்கோட்டை வீரசேனன்: காவிரியில் தண்ணீர் வந்தாலும் சாகுபடி செய்வதற்குப் பயிர்க்கடன் வழங்க வேண்டும்.

இதற்காக வங்கியை நாடும்போது அடங்கல் சான்று கேட்கின்றனர். கடந்த ஆண்டு அடங்கல் சான்று கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர் என்றார். இதற்கு கலெக்டர் பதிலளிக்கையில், நடப்பாண்டு அடங்கல் வழங்குமாறு அனைத்து வட்டாட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்படும் என்றார். பாசனதாரர் சங்க தலை வர் ஆம்பலாப்பட்டு தங்கவேல்: நல்ல தரமான விதை விதைத்தால்தான் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்டுக்கோட்டை பகுதியில் விதை நெல்லில் அகத்தூய்மை, புறத்தூய்மை அகற்றாத கலப்பின நெல்விதைகளை கூடுதல் விலைக்கு தனியார் கடைகளில் விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்னை உற்பத்தியாளர் சங்க தலைவர் மல்லிப்பட்டினம் கமால்பாட்சா: நெல், கரும்புக்கு அடுத்து பெரிய அளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு தேங்காய் ரூ. 22க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 8க்கு கூட விலை கேட்க ஆளில்லை. தென்னை விவசாயிகள் இதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, நெல், கரும்பு போல தேங்காய்களையும் அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மதுக்கூர் ராமச்சந்திரன்: தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணத்திடல் சிவக்குமார்: மேட்டூரில் இருந்து 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் பயன் பெறுவார்கள். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் தொகை ரூ.1 லட்சத்தை உயர்த்தி ரூ.1.5 லட்சமாக வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

Related Stories: