×

ஆலங்குடி அருகே வாராப்பூர் ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த 853 காளைகள்

ஆலங்குடி, மே 28: ஆலங்குடி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 853 காளைகள் பங்கேற்றன. போட்டியில் 62 பேர் காயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாராப்பூர் பாலையடி கருப்பர் கோவில் வைகாசி தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா ஜல்லிக்கட்டுக்கான உறுதிமொழி வாசிக்க வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். பிறகு ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டில் மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 853 காளைகள் பங்கேற்றது. ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு 6 சுற்றுகளாக காளைகளை அடக்கினர். போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சார்பாக ரொக்க பரிசு, சைக்கிள், கிரைண்டர், மின்விசிறி, எவர் சில்வர் பாத்திரங்கள், ஹெல்மெட் உட்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

போட்டியில் கறம்பக்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 62 பேர் காயமடைந்தனர். இது ஒரு வீரர் உட்பட 5 பார்வையாளர்கள் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் வடிவேலு தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Warappur Jallikkat ,Alangudi ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ,...