×

போடி-மதுரை அகலரயில் பாதையை மின்மயமாக்க விரைவில் நடவடிக்கை தேனி எம்பி ரவீந்திரநாத் பேச்சு

தேனி, மே 28: மதுரை-போடி அகல ரயில் பாதையில், தேனி வரை ரயில் சேவையை, சென்னையில் நேற்று முன்தினம் மாலை, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்து, காணொலி காட்சி மூலம் மதுரை-தேனி ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இதற்கான விழா தேனி ரயில்நிலையத்தில் நடந்தது. இதில், தேனி எம்பி ஓ.ரவீந்திரநாத், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராசன், கலெக்டர் முரளீதரன், போலீஸ் எஸ்பி டோங்கரே  பிரவீன் உமேஷ். போடி மதுரை அகல ரயில் பாதை திட்ட அமலாக்க குழு தலைவர் முன்னாள் எம்எல்ஏ லாசர், செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர், தொழிலதிபர் முத்து கோவிந்தன் உள்ளிட்ட அதிமுக, பாஜ, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

பிரதமர் காணொலி காட்சி மூலம் ரயிலை துவக்கி வைத்ததையடுத்து மதுரையிலிருந்து தென்னக ரயில்வேயின் முதன்மை பொறியாளர் இளம்பூரணன், துணை  முதன்மைப் பொறியாளர் சூரியமூர்த்தி ஆகியோருடன் பயணிகள் ரயில் தேனி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. தேனிக்கு வந்த ரயிலை எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மலர் தூவி வரவேற்றனர். முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் எம்பி ரவீந்திரநாத் பேசியதாவது: 2010ல் நிறுத்தப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் சேவை, 12 ஆண்டு கழித்து தற்போது அகல ரயில் பாதையாக கிடைத்துள்ளது.

இதற்காக பிரதமர், ரயில்வே துறை அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். இதையடுத்து நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது பணி முடிந்து ரயில் பயணிகள் சேவையை தொடங்கியுள்ளது. இச்சேவையை வாரத்திற்கு மூன்று முறை தேனியில் இருந்து சென்னை வரை பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். மேலும், போடி-மதுரை அகல ரயில் மின்சார ரயில் திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல்-லோயர்கேம்ப் ரயில் சேவை திட்டத்திற்கு  மத்திய ரயில்வே துறை உரிய நடவடிக்கை எடுக்க எம்பி என்ற வகையில் முயற்சி எடுப்பேன் என உறுதியளித்தார்.

Tags : Rabindranath ,Bodi-Madurai road ,
× RELATED நான்கரை ஆண்டுகள் யாரால் ஆட்சி...