மானாமதுரை அருகே ஜல்லிக்கட்டு காளைகள் முட்டி 10 பேர் காயம்

மானாமதுரை, மே 28: மானாமதுரை அருகே கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் சமயணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்றன.சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் பாய்ந்தோடி சென்றன. சில காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடின. சிறந்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும்  டைனிங் டேபிள், கட்டில், சீலிங்பேன், டேபிள்பேன், சில்வர் அண்டா, வாளி, சேர், ரொக்கப்பணம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இவர்களுக்கு மானாமதுரை அரசு மருத்துவமனையிலும் முத்தனேந்தல் ஆரம்பசுகாதார நிலையத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை பெரும்பச்சேரி மேட்டுமடை ஜல்லிக்கட்டு விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: