ஈரோட்டில் சிறுபான்மை நலத்துறை இயக்குநர் ஆய்வு

ஈரோடு, மே 28:  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அலுவலர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இயக்குநர் சுரேஷ்குமார் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் பதிவு பெற்ற உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், ஜெருசலம் புனித பயணத்திற்கான நிதியுதவி, கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுது பார்த்தல், கல்வி உதவித் தொகை, டாம்கோ கடன் திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நலத்துறை விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் நல விடுதிகளில் தங்கி பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டித்தேர்விற்கு தயாராகும் வகையில் ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டிலான பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்பட்டுள்ளது. மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் மற்றும் சலவை பெட்டிகள் தகுதியுடைய பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது. கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்கிட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: