×

தமிழக பனை ஓலை பொருட்களுக்கு வடமாநிலங்களில் நல்ல மவுசு பரமக்குடி கண்காட்சியில் தகவல்

பரமக்குடி, மே 27: ராமநாதபுரம்  மாவட்டத்தில் சுமார் ஒரு கோடி பனை மரங்கள் உள்ளன. பனை மரத்தில் பனை ஓலை,  நுங்கு, பனை மட்டை, பனங்கிழங்கு என அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைமர தொழிலை நம்பி மட்டும் 10 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். பரமக்குடியில் தனியார் மகாலில் பனையோலை  கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி,  கைவினை பொருட்கள் தென்மண்டல மண்டல இயக்குனர் பிரபாகரன், பயிற்சி உதவி  இயக்குனர் ரூப் சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம்  மாவட்டத்தில் பனை ஓலையில் தயார் செய்யப்படும் கொட்டான், பழக்கூடை,  அரிசிக்கூடை, பனை விசிறி, குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், பனை தொப்பி,  பனை பாய் என ஏராளமான பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.  கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பெண்கள் முன்னேற்ற அமைப்பு நிறுவனர் கல்யாணி  செய்திருந்தார்.

பனை ஓலை கைவினை தயாரிப்பாளர் ரோஸ் கூறுகையில், ‘மத்திய,  மாநில அரசு சார்பில் பனை ஓலை கைவினை பொருட்கள் தயாரிப்பதற்கு கடந்த ஒரு  வருடமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் சிறு, சிறு பனை ஓலை  பொருட்களுக்கு வடமாநிலங்களில் நல்ல மவுசு உள்ளது. தமிழகத்தில் ரூ.30  விற்கப்படும் பனை ஓலை பொருட்கள் வடமாநிலங்களில் ரூ.100 முதல் ரூ.200 வரை  விற்கப்படுகிறது. எனவே வடமாநிலங்களில் தமிழக பனை ஓலை பொருட்களுக்கு நல்ல  விலை கிடைக்கிறது’ என்றார்.
பனை ஓலை கைவினை பொருட்கள் பயிற்சி  அதிகாரி பிரதிஜா கூறுகையில் ‘பனை ஓலை பொருட்களில் பலவிதமான பொருட்கள்  செய்வதற்கு பெண்களுக்கு மானியத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. பனை ஓலை  பொரருட்களை ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்‘ என்றார்.

Tags : good mavusu paramakudi exhibition ,northern states ,Tamil Nadu ,
× RELATED ‘ஹோலி’ கொண்டாட்டம் என்ற பெயரில்...