சிவகங்கையில் சார் பதிவாளர் அலுவலக எல்லை மறு சீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம்

சிவகங்கை, மே 27: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் வட்டம், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களின் எல்லைகளை மறு சீரமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில்  சிவகங்கை, காரைக்குடி ஆகியன பதிவு மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. சிவகங்கை பதிவு மாவட்டத்தில் காளையார்கோவில், இளையான்குடி, திருப்புவனம், மதகுபட்டி, மானாமதுரை, சிவகங்கை இணை 1 மற்றும் இணை 2 என 7 சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. அதேபோல் காரைக்குடி பதிவு மாவட்டத்தில் காரைக்குடி இணை 1, காரைக்குடி இணை 2, சிங்கம்புணரி, திருப்புத்தூர், தேவகோட்டை என 5 சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. பதிவு மாவட்டங்களில் இணைக்கப்பட வேண்டிய வருவாய் கிராமங்கள், குக்கிராமங்கள் குறித்து சார் பதிவு அலுவலகங்களில் ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து, எல்லை மறுசீரமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. குறிப்பிட்ட வருவாய் கிராமத்துடன் உத்தேசமாக இணைக்க வேண்டிய வருவாய் வட்டங்கள், குக்கிராமங்களின் பட்டியல் சம்மந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது சொத்து ஆவணங்கள் குறித்து மேல் நடவடிக்கைக்காக எளிதில் வந்து செல்லும் வகையில் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், பதிவுத்துறை துணை தலைவர் ஜெகதீசன், மாவட்ட பதிவாளர்கள் கவிநிலவு, லலிதா, தணிக்கை மாவட்ட பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: