நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அடிப்படை வசதி

கரூர், மே 27: கருர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மாவட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்தார். எம்பி ஜோதிமணி முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் சார்பில் கரூர் மாவட்டத்தின் நகர்ப்புற பகுதிகளில் வாழும் ஏழை எளிய பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களுக்கு சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் சுகாதார வசதிகளை அமைக்கவும், அரசின் சமூக நலத்திட்டங்கள் ஏழை மக்களை சென்றடையவும் அடிப்படை வசதிகள் செய்யவும், அரசு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், மாவட்ட கலெக்டரை தலைவராகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சி கமிஷனர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), திட்ட அலுவலர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் உறுப்பினர்களாக கொண்ட கரூர் மாவட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குழு மாவட்ட கலெக்டரால் அமைக்கப்பட்டு அதன் முதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த குழுவின் மூலம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த பகுதிகளில் நியாய விலைக்கடைகள், புறக்காவல் நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், குடிநீர் வழங்குதல், கழிவு நீர் அகற்றுதல், தெருவிளக்கு அமைத்தல், மகளிர் சுய உதவி குழு உருவாக்குதல், வேலை வாய்ப்பு திறன் பயிற்சி அளித்தல், ஆவின் நிலையம் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் இடத்திற்கு தகுந்தவாறு மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், காவல்துறை துணை கண்காணிப்பாளர் குமார், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை) ஞானக்கண் பிரேம்நிவாஸ், கோட்டாட்சியர் (பொ) சந்தியா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Stories: