×

7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கம்யூ. மற்றும் வி.சி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு விசிக தொகுதி செயலாளர் யோகா தலைமை தாங்கினார். சிபிஐ மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சரவணன், நிர்வாகிகள் வெங்கடேசன், ராபின், மோகனா, கீதா, உதயநிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விசிக மாநில நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், தளபதி சுந்தர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான வரியை நீக்கி, விலைவாசி உயர்வை மொத்தமாக திரும்பப் பெறவேண்டும். பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாயவிலை கடைகளில் வழங்கவேண்டும். வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 7500 வழங்கவேண்டும். ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் கொண்டு வரவேண்டும். வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் முழுமையாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ் கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் எம்.அன்பு தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் விஷ்ணுதரன், இந்திய கம்யூனிஸ்ட் பேரூர் செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட நிர்வாகி சுந்தரம், வட்ட செயலாளர் ஏ.ஜி.கண்ணன், விசிக தண்டலம் தமிழ்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆவடி: பெட்ரோல், டீசல், சமையல்காஸ் மீதான வரிகளை கைவிட வேண்டும், விலை உயர்வுகளை மொத்தமாக திரும்பப் பெறவேணடும், பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டும். வருமான வரி வரம்பை எட்ட முடியாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஒரகடம் குமணன் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் பூபாலன், 10வது மாமன்ற உறுப்பினர் ஜான், விடுதலை சிறுத்தைகள் கட்சி  ஆவடி தொகுதி செயலாளர் ஆதவன், பகுதி செயலாளர்கள் ராமதாஸ், தளபதி, நேதாஜி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : VC ,
× RELATED புதிய பாய்ச்சலுடன் புத்தாண்டை...