×

மது விருந்தில் ஐடி ஊழியர் பலி... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்பட 3 பேர் கைது: 3 பார்களுக்கு சீல்

அண்ணாநகர்: சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலில் அமைந்துள்ள பாரில், கடந்த 21ம் தேதி பிரேசில் நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற மந்த்திரா கோமரா என்பவரின் கேளிக்கை நிகழ்ச்சி மற்றும் சட்ட விரோதமாக விடிய விடிய மது விருந்து நடந்தது. இதுபற்றி அறிந்த அரும்பாக்கம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார், இந்த மது விருந்து குறித்து   விசாரித்தனர். அப்போது, கூட்டத்தின் நடுவே மயங்கி கிடந்த, மடிப்பாக்கத்தை சேர்ந்த இன்ஜினியர் பிரவீன் (23) என்பவரை எழுப்பியபோது அவர் மூச்சு பேச்சற்று மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக 108 ஆம்புலன்சில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்த மாலில் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்ட 3 பார்களுக்கு அமைந்தகரை வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார் மேலாளார்களான அண்ணாநகரை சேர்ந்த நிவாஸ் (33), எட்வின் (35) மற்றும் அங்கு ஊழியராக பணிபுரிந்த பரத் (41),  ஆகியோரை கைது செய்து, கடந்த 22ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மார்க் (எ) ரவிந்திரகுமார் (26), பார் ஊழியர்களான அண்ணாநகரை சேர்ந்த விக்னேஷ் சின்னதுரை (33), மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பவன் (34) ஆகிய 3 பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...