காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணி துவங்கியது

உடுமலை, மே 26:உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பிஏபி பாசன தொகுப்பு அணையான இந்த அணைக்கு, பரம்பிக்குளம் அணையில் இருந்து, சர்க்கார்பதி மின்நிலையம் வழியாக, காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர, உடுமலை நகராட்சி மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.இந்நிலையில், 49.5 கிமீ நீள காண்டூர் கால்வாயில் பல இடங்களில் கரைகள் சேதமடைந்தும், விரிசல் விட்டும், செடிகொடிகள் வளர்ந்தும், கான்கிரீட் தளம் சேதமடைந்தும் காணப்பட்டது. இதனால் அணைக்கு தண்ணீர் வருவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் கோரிக்கை யை ஏற்று, கால்வாயை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கியது. முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்ததால், சீரமைப்பு பணி தாமதமாகியது.இந்நிலையில், முதலாம் மண்டல பாசனம் சமீபத்தில் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து, காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறப்பும் நிறுத்தப்பட்டது.இதையடுத்து, நேற்று சீரமைப்பு பணிகள் துவங்கின. திருமூர்த்தி அணையில் இருந்து 19 கிமீ., தொலைவில் உள்ள நல்லாறு ஷட்டர் பகுதியில் இருந்து பணிகள் துவங்கி உள்ளது. பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மாரிமுத்து மேற்பார்வையில் பணிகள் நடக்கிறது.கால்வாயின் இரண்டு கரைகளிலும் பழைய சிமென்ட் காரைகளை பெயர்த்தெடுத்து, புதிதாக சிமென்ட் தளம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: