மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு ஆறுகள், வாய்க்கால் மதகுகளை சீரமைக்கும் பணி

திருவாரூர், மே 26: மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் மதகுகள் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டில் தூர்வாரும் பணியானது கடந்த 1ந் தேதி துவங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 1200.56 கிலோமீட்டர் நீளத்திற்கு ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிக்காக ரூ.12 கோடியே 8 லட்சத்து 92 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரையில் 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு வரும் 31ந் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் நடப்பாண்டில் மே மாதம் முதல் தேதி தூர்வாரும் பணி துவங்கப்பட்டது மற்றும் வரலாற்றில் இல்லாத வகையில் மேட்டூர் அணை மே மாதம் 24ந் தேதி திறந்து வைக்கப்பட்டது போன்ற காரணங்களுக்காக தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் குறுவை சாகுபடிக்காக விதை நெல்கள் மற்றும் உரங்கள் போன்றவை வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் மதகுகள் சீரமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ஓடம்போக்கி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் பொதுப்பணித்துறையினர் மூலம் மதகுகள் சீரமைக்கப்பட்டு வர்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: