நெல்லை, மே 26: நெல்லை மாநகராட்சி அலுவலத்தில் வழக்கமாக செவ்வாய்க்கிழமையில் நடத்தப்பட்டு வந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நிர்வாக காரணங்களுக்காக புதன்கிழமைதோறும் நடைபெறும் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமிற்கு தலைமை வகித்த ஆணையாளர் விஷ்ணுசந்திரன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். இதில் நெல்லை மண்டல தலைவர் மகேஷ்வரி, மாநகர பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் நாராயணன் மற்றும் உதவி ஆணையர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். நெல்லை சந்திப்பு ஹைரோடு வியாபாரிகள் சங்கத்தினர் அளித்த மனுவில் சந்திப்பு பஸ் நிலையத்திற்கு ஏற்கனவே வந்த அனைத்து பஸ்களையும் வந்து செல்ல ஏற்பாடு செய்யவும் அப்பகுதி சாலைகளை சீரமைக்க கோரியும் மனு அளித்தனர்.
இதனிடையே நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்யாநகர் நகர்நல சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் அளித்த மனு விவரம்: தெற்கு பாலபாக்யாநகர் பகுதி வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள கதவு இலக்கம் சீராக இல்லாததால் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. வீட்டின் முகவரியை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. தபால்களும் ஒழுங்காக வந்து சேருவதில்லை. காவல்துறையினர் பாாஸ்போர்ட் வழங்குவதற்கு காலவிரயம் ஏற்படுகிறது. எனவே பாலபாக்யா நகரில் சாலை பதிவேடுபடி தெரு பெயர் பலகை வைத்து வீட்டு கதவு எண்களையும் சீராக வழங்க வேண்டும். மேலும் சாலை மற்றும் குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும். தெரு நாய் தொல்லையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதேபோல் பாளை சாந்திநகர் அரசு ஊழியர் மற்றும் காவலர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில் இப்பகுதியில் வீடுகளுக்கு இணைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இங்கு இதுவரை பாதாள சாக்கடை அமைக்கப்படவில்லை. எனவே பாதாள சாக்கடை அமைக்க வேண்டும். குடிநீர் தொட்டி அமைந்துள்ள பகுதியில் அடர்ந்துள்ள முள்செடிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். பாளை தியாகராஜ நகரை சேர்ந்த செல்வகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் அளித்துள்ள மனுவில் விதிமுறைகளை மீறி குடிநீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் இப்பகுதியில் சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லை மாநகர சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் நாராயணன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ஜெயக்குமார் அளித்த மனு: டவுன் வடக்கு ரத வீதி, கீழ ரத வீதியில் ஒரு தலைமுறையாக பேன்சி பொருட்கள் வைத்து விற்பனை செய்து வருகிறோம். மதுரை உயர்நீதிமன்ற ஆணை பெற்று சுமார் 40 கடைகள் சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கம் மூலம் வியாபாரம் செய்து வருகிறோம். எங்களுக்கு டவுன் பகுதியில் நிரந்தரமான இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் மூலம் கடை அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளனர். தச்சநல்லூர் கிரான்ட் புதுதெருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மகாராஜன் என்பவர் தனக்கு 2 கால்களும் கிடையாது; தனது மனைவி வாய்பேச முடியாதவர். வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்படும் நிலையில் எங்களது வாழ்தாரத்திற்காக பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்த உதவிசெய்ய கோரி ஆணையரிடம் மனு கொடுத்தார்.சுகாதார சீர்கேடுஇந்திய கம்யூனிஸ்ட் (மா லெ) கட்சியினர் மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் தலைமையில் அளித்துள்ள மனுவில் பேட்டை லால்பகதூர் சாஸ்திரி பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் பெரும்பாலானோரான இலங்கை தமிழர்கள் கூலி தொழில் செய்து வருகின்றனர். எனவே, இங்குள்ள பொது கழிப்பிடத்தை சீரமைப்பதோடு சிறுவர் பூங்காவில் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும். பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் அவர்கள் அளித்துள்ள மற்றொரு மனுவில் பேட்டை படையாச்சி தெருவில் மகளிர் கழிப்பறைக்கு செல்லும் செல்லும் வழியில் தேங்கிநிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே இதை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். கொசு தொல்லையை போக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.