×

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பரிகார பூஜைகள் தொடங்கின அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு

குலசேகரம், மே 26. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்துக்கு முன்தைய பரிகார பூஜைகள் நேற்று தொடங்கின. கோயிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். 108  வைணவ திருத்தலங்களில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலும் ஒன்று. இந்த  கோயிலில் கடந்த 1604ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின்னர்  இதுவரையிலும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. திருப்பணிகள் மட்டும் நடந்து  வந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் கும்பாபிஷேகம்  நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டது. அறநிலையத்துறை  அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் இந்த  கோயிலில்  ஆய்வு மேற்கொண்டனர். இதன் பலனாக கும்பாபிஷேகம்  நடத்துவதற்காக கடந்த 2 மாதத்துக்கு முன்பு தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்வு  நடைபெற்றது. இதையடுத்து ஜூலை 6ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு  செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் கும்பாபிஷேகத்துக்கு  முந்தைய பரிகார பூஜை நேற்று தொடங்கியது. மேலும் கோயிலின் பழமை மாறாமல்  மூலிகை வர்ண ஓவியங்கள் வரையும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகளை தகவல்  தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் கோயில் மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்க ஏற்பாடு  செய்துள்ளார். இதற்காக ரூ10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கு குமரி மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த  கோயிலில் 2 முறை திருட்டு நடைபெற்றுள்ளது.  திருடப்பட்ட நகைகள்  மீட்கப்பட்டாலும் இது தொடர்பான வழக்கு பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து  வருவதால் நகைகள் நீதிமன்றத்தின் பராமரிப்பில் உள்ளது. எனவே நீதிமன்ற  உத்தரவுக்கு காத்திருக்காமல் திருடப்பட்ட நகைகளுக்கு பதிலாக ஆதி கேசவ  பெருமாள் கோயில் மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்க முதல்வர் நடவடிக்கை  எடுத்துள்ளார். இதனால் கும்பாபிஷேகத்துக்கு பின்னர் பழமை மாறாமல்  புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும்.

அறநிலையத்துறை சார்பில் குமரி மாவட்ட  கோயில்களில் புனரமைப்பு பணிகள், வணிக வளாகங்கள் அமைத்தல் என ரூ.36  கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.  குமரி  மாவட்டம் முழுவதும் பாரம்பரியம் மற்றும் கலை நயமிக்க கோயில்களை ஒன்றிணைத்து  ஆன்மிக சுற்றுலா திட்டம் ஏற்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. இதன் மூலம் முன்னோர்கள் உருவாக்கிய பாரம்பரியங்கள் வெளியுலகிற்கு  தெரியவரும். குமரியில் உள்ள 12 சிவாலயங்களை புனரமைக்க ரூ.2.5 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிதறால் மலைக்கோயிலில் என்னென்ன  பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து  நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது   அறநிலையத்துறை இணை ஆணையாளர் ஞான சேகர், கண்காணிப்பாளர் ஆனந்த், பொறியாளர்   ராஜ் குமார், கோயில் மேலாளர் மோகன் குமார், திருவட்டார் தெற்கு ஒன்றிய   தி.முக செயலாளர் ஜான் பிரைட், துணை செயலாளர் ராஜூ, பொருளாளர் சுந்தர் ராஜ்,   ஆற்றூர் பேரூராட்சி தலைவர் பீனா அமிர்தராஜ், துணை தலைவர் தங்கவேல்,  குமரன்குடி ஊராட்சி தலைவர் பால்சன், அருவிக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு   வங்கி தலைவர் ஜான் கிறிஸ்டோபர், ஆதிகேசவ பெருமாள் கோயில் பக்தர்கள் சங்க   தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் பகவதி, கவுன்சிலர்கள் பாபு, சிவன்,   புஷ்பம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Mano Thankaraj ,Thiruvattar Adigesava Perumal Temple ,
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...