4 நாட்களுக்கு பின் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

குலசேகரம்,மே 26: குமரி மாவட்டத்தில் கடந்த சில  நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணை நீர்மட்டம்  45 அடியை கடந்தது. இதனால் கடந்த சனி கிழமை அணையிலிருந்து மறுகால் மதகுகள் வழியாக உபரி நீர் கோதையாற்றில் திறந்து விடப்பட்டது. மழை நீருடன் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரும் சேர்ந்ததால் கோதையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டியது.  பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கோடை சீசனில் சுற்றுலா வந்த பயணிகளால் அருவியின் அழகை மட்டும் ரசிக்க முடிந்தது. இந்த நிலையில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. அணையிலிருந்து மறுகால் வழியாக உபரி நீர் வெளியேற்றமும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து 4 நாட்களுக்கு பின் நேற்று முதல் அருவியில் வெள்ளம் குறைவாக விழும் பகுதியில் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று சாரல் மழை அவ்வப்போது பெய்து இதமான குளிர் காற்று வீசி ரம்மியமான சூழல் நிலவியது. இது பயணிகளை உற்சாகப்படுத்தியது.

Related Stories: