சென்னை மாநகரில் கட்டுமான பணிக்கு திட்ட அனுமதி பெற்ற 397 கட்டிடங்களில் திடீர் ஆய்வு: 16 கட்டிடங்களில் விதிமீறல் கண்டுபிடிப்பு; 5 கட்டிடங்களை இடிக்க சிஎம்டிஏ முடிவு

சென்னை: சென்னை மாநகரில் 2 அடுக்கு மாடிக்கு மேல் கட்டப்படும் கட்டுமான பணிக்கு சிஎம்டிஏ மூலம் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்ட அனுமதி முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் பிறகு கட்டுமான பணி முடிந்தபின், பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தில் ஆய்வு செய்யாமல் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டன. இதை பயன்படுத்திக் கொண்டு கட்டுமான நிறுவனங்கள் சில அனுமதியை மீறி கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக புகார் வந்தும் அதை கண்டும்காணாமல் இருந்தனர். இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் கட்டுமான அனுமதி பெறப்பட்ட அனைத்து கட்டிடங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று சிஎம்டிஏவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில், கடந்த 5 மாதத்தில் சிஎம்டிஏ சார்பில் 397 கட்டிடங்களுக்கு கட்டுமான அனுமதி வழங்கப்பட்டன. இந்த கட்டிடங்கள் கட்டுமான அனுமதிக்குட்பட்ட கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பது குறித்து சிஎம்டிஏ அமலாக்கப்பிரிவினர், 5 குழுக்களாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, 16 கட்டிடங்கள் கட்டுமான திட்ட அனுமதி மீறி கட்டிவது வருவது தெரியவந்துள்ளது. இதில், 5 கட்டிடங்கள் பெரிய அளவில் விதிமுறை மீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமான திட்ட அனுமதி பெறப்பட்ட கட்டிடங்களில் 115 கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்ட நிலையில், விரைவில் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதே போன்று பெரிய அளவில் விதிமுறை மீறிய 5 கட்டிடங்களை இடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: