சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள்

சிவகங்கை, மே 25: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போட்டித்தேர்விற்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசியதாவது:சிவகங்கை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு தகுதிக்கேற்ப தனியார் நிறுவனத்தில் பணி நியமனம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அரசுத்துறையில் வேலைவாய்ப்பை பெறுவதற்காக பலர் பல்வேறு போட்டித் தேர்விற்கென தயாராகி வருகின்றனர்.

அவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போட்டித் தேர்விற்கென, பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளதால், அதற்கான பயிற்சி வகுப்புக்கள் தொடங்க உள்ளன.பயிற்சி வகுப்பில் எவ்விதச் சிரமமின்றி பயிற்சி மேற்கொள்ளும் பொருட்டு, பயனுள்ள வகையில் அனைத்து வகையான பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். மேலும் அனைத்து அடிப்படை வசதிகளும் பயிற்சி மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதனை முறையாக பயன்படுத்திக் கொண்டு, நல்லமுறையில் போட்டித் தேர்வுகளை எதிர் கொண்டு, வெற்றி பெற வேண்டும். இவ்வாறு பேசினார்.இந்நிகழ்ச்சியில் ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் வானதி, உதவி ஆணையர்(தொழிலாளர் நலத்துறை) கோட்டீஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) வீரராகவன் மறறும் தேர்வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: