மெலட்டூரில் நரசிம்ம ஜெயந்தியையொட்டி விடிய விடிய நடந்த ஹரிச்சந்திரா நாடகம்

பாபநாசம், மே 24: மெலட்டூரில் லட்சுமி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாடக விழாவில் ஹரிச்சந்திரா நாடகம் விடிய விடிய நடைபெற்றது. நாடகத்தில் பெண்கள் போன்று ஆண்களே வேடமணிந்து தத்ரூபமாக நடித்தனர். தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா மெலட்டூரில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு லட்சுமி நரசிம்ம ஜெயந்தி பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் 82ம் ஆண்டு பாகவத மேளா நாடக விழா ஹரிச்சந்திரா நாடகம் நடைபெற்றது. தினமும் இரவு துவங்கும் பாகவத மேளா நாடகங்கள் அதிகாலை வரை நடைபெறும். இந்த நாடகங்களில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர். இந்நாடக நடிகர்கள் தொழில்முறை நாடகக் கலைஞர்கள் அல்ல. இவர்கள் அனைவரும் வங்கி, தனியார் நிறுவனம், சாப்ட்வேர் கம்பெனி என பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளாக இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்துவரும் இவர்கள் மெலட்டூர் உள்ளுர்வாசிகள். மேலும் குடும்பம் வழிவழியாக தந்தை, மகன் என தொடர்ந்து நடித்து இந்த நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர். தெய்வீகம், இசை, நாட்டிய மரபுகள் நிறைந்த பாகவத மேளா பழமை மாறாமல் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக மெலட்டூரில் நடத்தப்பட்டு வருகிறது. நாடகத்தினை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு நாடகத்தை கண்டுகளித்தனர். நாடக விழாவுக்கான ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்ம ஜெயந்தி பாகவதமேளா நாட்டிய நாடக சங்க இயக்குநர் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: