×

தனி நபர்கள் ஆக்கிரமிப்பு நாகூர் தர்காவுக்கு சொந்தமான 7 லட்சம் சதுர அடி நிலம் மீட்பு

நாகை, மே 25: நாகூர் தர்காவிற்கு சொந்தமான 7 லட்சம் சதுர அடி நிலங்கள் தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது. நாகூர் தர்காவிற்கு சொந்தமான நிலங்கள், சொத்துக்கள் சில தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த சொத்துக்களை மீட்க புதிதாக நாகூர் தர்காவிற்கு புதிதாக பொறுப்பேற்ற அறங்காவலர் குழுவினர் நாகூர் தர்கா சொத்துக்களை மீட்க தனியாக பிரிவை உருவாக்கினர். இதையடுத்து நாகூர் தர்கா சொத்துக்களை கண்டறிந்து மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். நாகூர் தர்கா பெயரில் உள்ள சொத்தினை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள் உதவியுடன் சொத்துக்கள் அடையாளம் கண்டு நாகூர் நிர்வாகம் சார்பில் சொத்துக்களை பயன்படுத்துவோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் சிலர் தாமாக முன்வந்து முழு மனதுடன் தர்கா நிர்வாக சொத்துக்களை ஒப்படைத்து வருகின்றனர்.

இதன்படி கடந்த 2ம் தேதி 2 லட்சத்து 5 ஆயிரத்து 511 சதுர அடி நிலங்கள் மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 9ம் தேதி 76 ஆயிரத்து 424 சதுர அடி நிலங்கள் மீட்கப்பட்டது. அதே நாளில் 40 ஆயிரத்து 136 சதுர அடி நிலம் மீட்கப்பட்டது. அதே போல் 30 ஆயிரத்து 492 சதுர அடி நிலம் மீட்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி 4 லட்சத்து 20 ஆயிரத்து 690 சதுர அடி நிலங்கள் மீட்கப்பட்டது. இதில் கூத்தாநல்லூர் வட்டம் பெருமாளகரம் கிராமத்தை சேர்ந்த ராதா என்பவரிடம் 1 லட்சத்து 61 ஆயிரத்து 390 சதுர அடி நிலம் மீட்கப்பட்டது. திருவாரூர் சனவெளி புதூர் கிராமத்தை சேர்ந்த சத்யா என்பவரிடம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 300 சதுர அடி நிலம் மீட்கப்பட்டது. ஆக மொத்தம் இன்று வரை நாகூர் தர்காவிற்கு சொந்தமான 7 லட்சம் சதுர அடி நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாகூர் தர்கா பிரசிடன்ட் கலீபா சாகிப் கூறியதாவது: நாகூர் தர்காவிற்கு சொந்தமாக மீட்கப்பட்ட சொத்துக்கள் தமிழக அரசு கெஜட்டில் நாகூர் தர்கா பெயரில் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. நாகூர் தர்கா நிர்வாகத்தின் இத்தகைய பணியால் சிலர் பாதிக்கப்பட்டாலும் சொத்துக்களை மீட்பது நாகூர் தர்கா நிர்வாகத்தின் பொறுப்பு. எனவே நாகூர் தர்காவிற்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமித்து அனுபவித்து வருபவர்கள் தாமாகவே முன் வந்து தர்கா நிர்வாகத்திடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்றார்.

Tags : Nagore Dargah ,
× RELATED நாகூர் தர்காவில் சந்தன கூடு ஊர்வலம்...