×

கடனை கேட்டு பைனான்சியர் மிரட்டியதால் வாட்ஸ்அப்பில் வீடியோ பதிவிட்டு கடை உரிமையாளர் தற்கொலை: உறவினர்கள் முற்றுகை

பெரம்பூர்: கொளத்தூர் மக்காரம் தோட்டம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கந்தன் (எ) மாரி (28). கட்டுமான பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்தார். இவர், அதே பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவரும் வடிவேலுவிடம் ₹1 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதில், ₹65 ஆயிரத்தை திருப்பி செலுத்தி உள்ளார். தொழிலில் நஷ்டம் காரணமாக மீதமுள்ள ₹35 ஆயிரத்தை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாரியின் கடைக்கு சென்ற வடிவேலு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், ஒரு வாரத்தில் பணத்தை தராவிட்டால் கடையில் இருக்கும் பொருட்களை அள்ளிச் செல்வேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாரி நேற்று முன்தினம் இரவு, தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்தார். அதில், கடன் கொடுத்தவர் மிரட்டியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன், என பதிவு செய்து, அதை வாட்ஸ்அப்பில் தனது நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரி  இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த ராஜமங்களம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, மாரி இறப்புக்கு காரணமான பைனான்சியரை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...