பொதுப்பாதையை அதிமுக நிர்வாகி ஆக்ரமிப்பு வீட்டிற்கு மின் இணைப்பு கிடைக்காமல் தவிக்கும் பெண் குடும்பத்துடன் தர்ணா

திருச்சி, மே 24: மணப்பாறை அருகே பொதுப்பாதையை அதிமுக நிர்வாகி ஆக்ரமித்ததால் வீட்டிற்கு மின் இணைப்பு பெற முடியாமல் அவதிப்படும் பெண் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நீடித்தது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான மக்கள் டிஆர்ஓ பழனிகுமாரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அணியாப்பூரை சேர்ந்த பழனியப்பன் மனைவி தனலட்சுமி என்பவர் குடும்பத்துடன் வந்து கூட்டமன்றம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தனலட்சுமி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2012ம் ஆண்டு பசுமை திட்டத்தின் மூலம் வீடு கட்டினேன். வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 2012 டிசம்பரில் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். அதற்கு அவர்கள் தங்கள் வீட்டிற்கு வரும் பொதுப்பாதையை அளந்து அத்துக்காட்டி ஆக்ரமிப்பை அகற்றினால்தான் மின் இணைப்பு வழங்க முடியும் என விண்ணப்பத்தை மறுத்தனர். ஆனால் அந்த பொதுப்பாதையை பெரியசாமி என்பவர் ஆக்கிரமித்துள்ளார். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவர் அதிமுக நிர்வாகி. எனக்கு இன்று வரை மின் இணைப்பு கிடைக்கவில்லை. எனவே என் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories: