1347வது பிறந்த நாள் விழா முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

திருச்சி, மே 24: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாளையொட்டி திருச்சியில் அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் முழு உருவச்சிலைக்கு நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு, எம்எல்ஏக்கள் தியாகராஜன், பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவப்படத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், ‘தமிழனை தலைநிமிர செய்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ் பரவட்டும். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முத்தரையர் மக்களின் வளர்ச்சிக்கு என்றும் துணை நிற்கும்’ என்றார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், துணை மேயர் திவ்யா, கோட்டத் தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: