கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகையால் ₹1 லட்சத்து 67 ஆயிரம் கோடி ஒன்றிய அரசுக்கு இழப்பு விவசாய தொழிலாளர் சங்க தலைவர் பேட்டி

நாகர்கோவில், மே 22:  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் வரி சலுகையால் ஒன்றிய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது என்று முன்னாள் எம்.பி. விஜயராகவன் கூறினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க நாகர்கோவில் வந்த அகில இந்திய விவசாய  தொழிலாளர்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான விஜய ராகவன் நிருபர்களிடம் கூறியதாவது : நாட்டில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் இருப்பதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஆனால் நாட்டில் ஏழைகள்,பின் தங்கிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து எதிர்காலமே கேள்வி குறியான நிலையில் உள்ளனர். நாளுக்கு நாள் விலைவாசி உயர்வது வாடிக்கையாக உள்ளது. உணவுப் பொருட்களின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலை 70 சதவீதம் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதே சமயத்தில் பெரும் பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் கோடி ஒன்றிய அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு வங்கிகள் அதிகளவில் கடன்கள் வழங்க ஒன்றிய அரசு உதவி வருகிறது. மீனவர்களுக்கு முறையான மானிய மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை. ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களை பாதுகாக்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அரணாக ஒன்றிய அரசு விளங்கி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு பின் தொழிலாளர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட எந்த வித நடவடிக்கையையும் ஒன்றிய அரசு எடுக்க வில்லை. மாறாக பெட்ரோல் , டீசல், சமையல் காஸ் விலை உயர்வால் கீழ் தட்டு மக்களின் துன்பங்களும், துயரங்களும் அதிகரித்துள்ளன.

தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பா.ஜ. ஆளும் மாநிலங்களில் பிற மதத்தின் வழிபாட்டு தலங்களிலும் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒன்றிய அரசின் செயல்பாடுகளால் மக்கள் மிகவும் வெறுப்படைந்த நிலையில் உள்ளனர். மக்கள் விரோத அரசின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் 500 நகரங்களில் ஆகஸ்ட் மாதம் 1ம்  தேதி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் வெங்கிட், மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லாசர்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட தலைவர்  என்.எஸ் கண்ணன், செயலாளர் மலவிளைபாசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: