×

தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் ரூ.53 கோடியில் பணிகள் மேற்கொள்ள தீர்மானம்: துணை மேயர் தகவல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், துணை மேயர் காமராஜ் பேசுகையில், ‘‘மழைநீர் வடிகால், மின்மயானம் 3 பகுதிகளில் தயாராகிக் கொண்டிருக்கிறது. அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வது உட்பட ரூ.53 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,’ என்றார்.

4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ் பேசுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல்வேறு பணிகளுக்கு தனித்தனியாக ஒப்பந்தங்கள் போடப்பட்டு பணிகள் சரிவர நடைபெறாமல் இருந்தது. தொடர்ந்து தற்போதும் அதே ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு மாதம், இரண்டு மாதம் என அந்த பணிகள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் எந்தெந்த பணிகளுக்கு எந்தெந்த ஒப்பந்ததாரர்கள் என அவர்களை அணுக முடியவில்லை. அதேபோல் பணிகளும் சரியாக நடைபெறவில்லை. எனவே அவற்றை மாற்றியமைக்க புதிதாக டெண்டர் விடவேண்டும்.

தாம்பரம் நகரமன்ற தலைவராக தற்போதைய எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா இருந்தபோது 17 கோடி ரூபாய் இருப்பு வைத்துவிட்டு சென்றார். ஆனால் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தற்போது தாம்பரம் மாநகராட்சிக்கு 224 கோடி ரூபாய் கடன் உருவாகியுள்ளது. எனவே கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த எந்த ஆண்டு எவ்வளவு ரூபாய், எதற்காக கடன் வாங்கப்பட்டது என்பதற்கான  முழு  விவரங்களை தரவேண்டும்.’’ என்றார். அதற்கு பதிலளித்த மேயர்,  துணை மேயர் ஆகியோர் அடுத்த மாமன்ற கூட்டத்தில் முழு விவரங்களையும் கொடுப்பதாக தெரிவித்தனர். இதில் மண்டல தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை,  ஜெயபிரதீப் சந்திரன், வெ.கருணாநிதி, நியமன குழு உறுப்பினர் பெருங்குளத்தூர்  சேகர், நிலைக் குழு தலைவர்கள் கற்பகம் சுரேஷ், நடராஜன், ரமணி ஆதிமூலம்,  சுந்தரி ஜெயக்குமார், மதினா பேகம், நரேஷ் கண்ணா உட்பட 70 வார்டு மாமன்ற  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tambaram ,Corporation ,
× RELATED பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு:...