×

பாஜ அரசின் கொடும் சட்டங்களை எதிர்த்து நிற்கும் கட்சி திமுக திருச்சி சிவா எம்பி பேச்சு

திருமங்கலம், மே 21: மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகிக்க, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருச்சி சிவா எம்பி கலந்து கொண்டு பேசுகையில், ‘தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால இருண்டகால ஆட்சியை அகற்றிவிட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக நல்லாட்சி மலர்ந்துள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் ஓராண்டில் 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.

ஓராண்டு என்பது சிறுதுளி. ஆனால் கடல் அளவு சாதனைகளை செய்துள்ளோம். முதல்வராக பொறுப்பேற்றவுடன் தலைவர் ஸ்டாலின் அறிவித்த முக்கிய திட்டம் முதல்வர் செல்லும் போது பாதுகாப்பு பணிகளில் பெண் போலீசாரை பணியில் அமர்த்த கூடாது என்பது. இது பெண் போலீசாரிடம் மிகவும் மகிழ்ச்சியை அளித்த அறிவிப்பு. தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி தரப்படும் என அறிவித்துள்ளார். ஆரம்ப பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை மட்டுமே நியமிக்க வேண்டும் என கலைஞர் உத்தரவிட்டார். இதனால் பெண்களுக்கு அதிகளவில் அரசு வேலை கிடைக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகளின் மனம் அறிந்து பணிபுரியகூடியவர்கள் பெண்கள் என்பதால் இத்திட்டத்தினை செயல்படுத்தினோம்.

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த குடியுறுரிமை சட்டம், நீட் தேர்வு, முத்தலாக் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கொடிய சட்டங்களை உடனுக்குடன் எதிர்த்து நின்ற கட்சி திமுகதான். கடந்த அதிமுக ஆட்சியில் வெளிமாநிலத்தவர்கள் கூட தமிழக அரசுபணிகளில் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால் திமுக ஆட்சி அமர்ந்தவுடன் 6 லட்சம் வேலைகள் தமிழக மாணவர்களுக்கு மட்டும் கிடைக்கும் வகையில் அறிவுப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்’ என்றார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, தலைமை கழக பேச்சாளர் சல்மான், மாவட்ட பொருளாளர் பொடா நாகராஜன், திருமங்கலம் நகர செயலாளர் தர், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, ராமமூர்த்தி, ஞானசேகரன், முன்னாள் எம்எல்ஏக்கள் லதாஅதியமான், முத்துராமலிங்கம், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், அணிஅமைப்பாளர்கள் தங்கேஸ்வரன், பாண்டிமுருகன், மதன்குமார், பாசபிரபு, கிருத்திகா நிர்வாகிகள் செல்வம், அப்துல்கலாம் ஆசாத் சேட், கப்பலூர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Trichy Siva ,BJP government ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி